Published : 27 Aug 2024 05:43 AM
Last Updated : 27 Aug 2024 05:43 AM

ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு அறிவுறுத்தல்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய அறிவியல் மனப்பான்மை தின கருத்தரங்கில், ‘நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி’ என்ற நூலை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு வெளியிட்டார். இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நரேந்திர நாயக், அறிவியல் இயக்க நிர்வாகிகள் முனைவர் க.திருநாவுக்கரசு, முனைவர் எஸ்.கிருஷ்ணசாமி, எஸ்.சுப்ரமணி, எம்.சுதாகர், முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன், வ.அம்பிகா, எம்.சசிகுமார், நூலாசிரியர் எஸ்.மோசஸ் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.படம்: எஸ். சத்தியசீலன்

சென்னை: ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது மிகவும் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தின கருத்தரங்கம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலத் தலைவர் த.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

இக்கருத்தரங்கில் எழுத்தாளர் எஸ்.மோசஸ் பிரபு எழுதிய ‘நரேந்திர தபோல்கர் – மூடநம்பிக்கை ஒழிப்புபோராளி’, ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘அறிவியலின் குழந்தைகள்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விரு நூல்களையும் வெளியிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: பள்ளி பாடப் புத்தகங்களில் இருக்கும் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க எதுவுமே செய்வதில்லை.

ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இருப்பதே இதற்கு காரணம். மேம்பட்ட சமுதாயம் அமைய வேண்டுமானால், முதலில்ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும். அது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்றார்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முனைவர் நரேந்திர நாயக் பேசும்போது, “மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்க்கவும் மூடநம்பிக்கைகளை அகற்றவும் பாடுபட்டதற்காக நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். எனினும் அவரது இயக்கம் அழிந்துவிடவில்லை.

மகராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மூடநடம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழகம், கேரளாவிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.

அறிவியல் மனப்பான்மை பிரகடனம் பற்றி கல்வியாளர் எஸ்.கிருஷ்ணசாமி உரையாற்றினார். தமிழகத்தில் மூடநம்பிக்கைகள் குறித்த ஆய்வுத் தொகுப்பை எஸ்.ஆர்.சேதுராமன் வெளியிட்டார். அறிவியல் இயக்க நிர்வாகிகள் எஸ்.சுப்ரமணி, எம்.சுதாகர், எம்.சசிகுமார், வ.அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x