Published : 27 Aug 2024 06:15 AM
Last Updated : 27 Aug 2024 06:15 AM
சென்னை: பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்,பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர் மற்றும் இனப் படுகொலையைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று பேசியதாவது: இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் முதல் பிரதமரான நேரு காலம் தொடங்கி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து இந்தியா ஆதரவு நிலை எடுத்தது. ஆனால், இப்போது மத்தியில் உள்ள பாஜக அரசு இஸ்ரேலில் உள்ள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது, இந்தியாவின் அணி சேரா கொள்கைக்கு நேர் எதிரான கொள்கையாகும். இதுவரை அத்தகைய கொள்கையை நாம் பின்பற்றியது கிடையாது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் ஆயுதங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல், அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஒரு கொடிய குற்றச் செயலை செய்து கொண்டிருக்கிறது.
ஐ.நா. சபை போரை நிறுத்தும்படி இஸ்ரேலை பலமுறை வலியுறுத்தியும், இஸ்ரேல் ஐ.நா.சபையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அத்துடன், இந்தியாவும் சேர்ந்துஆதரவு அளிக்கிறது. போரைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். போர் 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக, லெபனான் நாட்டுக்குச் சென்ற ஹமாஸ் தலைவர்கள் வான்வழி தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, போர் தீவிரமடைந்துள்ளது. உலகம் அமைதியாகஇருந்தால்தான் எல்லா நாடுகளும்முன்னேறும். போரற்ற உலகத்தைஉலகம் காண வேண்டும். அதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் எம்.பி. கே.சுப்பராயன், மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் வஹிதா நிஜாம் உள்ளிட்டோர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT