Published : 27 Aug 2024 05:10 AM
Last Updated : 27 Aug 2024 05:10 AM
சென்னை: சென்னை கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோயிலில் தமிழக ஆளுநர் ரவி குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தநாள், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த நாள் இந்துக்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நேற்று கிருஷ்ண ஜெயந்திவிழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிலர் நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை பெரும்பாலானோர் நேற்று கொண்டாடினர். வைணவ சம்பிரதாயத்தினர் இன்று (ஆக.27 ஸ்ரீஜெயந்தியாக கொண்டாட உள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கோயிலில் கிருஷ்ணருக்கு நேற்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. கோபாலபுரத்தில் உள்ளவேணுகோபால சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல், கோட்டூர்புரம், சாஸ்திரி நகர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடத்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், வீடுகளிலும் கிருஷ்ணஜெயந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டுக்குள் கிருஷ்ணர் நடந்து வருவதுபோல கோலமிட்டும், மாலை, சீடை, முறுக்கு, அப்பம், அவல்,நாவல், லட்டு, தட்டை, வெண்ணெய் உள்ளிட்டவற்றை படைத்தும் வழிபட்டனர். அதேபோல, பல இடங்களில் கிருஷ்ணர், ராதைபோல தங்கள் குழந்தைகளுக்கு வேடமிட்டும் மகிழ்ந்தனர்.
இதேபோல், கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள‘இஸ்கான்’ கோயிலில் 3 நாட்கள்கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முக்கிய நாளான நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருக்கோலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானை பக்தர்கள் ஆராதித்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இஸ்கான் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு 24 மணி நேரமும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT