விஜயகாந்த் கண்ட கனவுகளை தேமுதிக வென்றெடுக்க பாடுபடும்: பிறந்த நாள் விழாவில் பிரேமலதா உறுதி

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் முழு உருவ சிலையை, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று திறந்து வைத்தார். உடன் விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சுதீஷ் உள்ளிட்டோர்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் முழு உருவ சிலையை, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று திறந்து வைத்தார். உடன் விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சுதீஷ் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: மறைந்த விஜயகாந்த் கனவுகளை தேமுதிக வென்றெடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரமேலதா தெரிவித்தார்.

தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் 72-வதுபிறந்த நாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விஜயகாந்த்நினைவிடத்தில், அவரது மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், நினைவிடத்தில் விஜயகாந்த்தின் மார்பளவு வெண்கல சிலையையும், அதற்கு பின்புறம் நிறுவப்பட்டுள்ள 6 அடி உயர வெண்கலசிலையையும் திறந்துவைத்து கண்கலங்கினார்.

இதைத் தொடர்ந்து தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், விஜயகாந்த்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நினைவிடத்துக்கு வருகை தந்த தேமுதிக தொண்டர்களுக்கு, பிரேமலதா உணவு பரிமாறி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின் பிரேமலதா கூறியதாவது: விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ்சங்கத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. தேமுதிகதலைமை அலுவலகத்துக்கு ‘கேப்டன் ஆலயம்’ என பெயர்சூட்டி உள்ளோம். அவரின் கனவுகளை தேமுதிக வென்றெடுக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப் பொருள்நடமாட்டம், பாலியல் வன்கொடுமை ஆகியவை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் இருக்கும்போது, எங்கள் வீட்டுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளனர். மீண்டும் பாதுகாப்பு தருவது தமிழக அரசின் முடிவு. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும். அதிமுகவுடன் நட்புறவில்தான் உள்ளோம். எங்கள் கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். விஜயபிரபாகரனுக்கு உரிய நேரம் வரும்போது தேமுதிகவில் பதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

இதற்கிடையே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுடன் தேமுதிக தொண்டர்கள் புகைப்படம் எடுத்து வந்தனர். அப்போது சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தேமுதிக நிர்வாகிகள் உடனடியாக காரில் ஏற்றி அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in