திமுக-பாஜக வெளியே எதிரி, உள்ளே உறவு; உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலை: இபிஎஸ் விமர்சனம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின்  பொதுச் செயலாளர் பழனிசாமி.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.
Updated on
1 min read

சேலம்: திமுக-பாஜக கட்சிகள் வெளியே எதிரியாகவும், உள்ளே உறவாகவும் உள்ளன. உழைக்காமல் பதவிக்கு வந்தவர் பாஜக தலைவர் அண்ணாமலை. அவருக்கு வாய்தான் முதலீடு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், கட்சி வழக்கறிஞர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு நாணயம் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில், பாஜகவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர், மாநிலத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, அந்தக் கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா, ராகுல் காந்தியைஅழைக்கவில்லை. ஊழல் நிறைந்தஆட்சி நடத்தி வரும் திமுக, தங்களது அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜக தயவை நாடியுள்ளது. இதை நான் கூறினால், திமுக, பாஜகவினருக்கு கோபம் வருகிறது.

அது மத்திய அரசு விழா என்று மழுப்புகிறார்கள். அழைப்பிதழில் மாநில அரசு சின்னம், தலைமைச் செயலர் அழைப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளது. எனவே, இது மாநில அரசு நடத்திய விழாதான்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், அதிமுக தொண்டனாக, மாநில முதல்வராக நான் நாணயம் வெளியிட்டேன். அதிமுக வரலாறு தெரியாத தமிழக பாஜகதலைவர், இதை சிறுமைப்படுத்திப் பேசுகிறார். அவர் பிறப்பதற்கு முன்பாகவே எம்ஜிஆர் முதல்வராக இருந்தவர்.

2021-ல் அதிமுக-வுடன் பாஜககூட்டணி வைத்தபோது, அதிமுகஆட்சி ஊழல் ஆட்சி என்று தெரியவில்லையா? மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்ற, அதிமுகவின் ஆதரவு தேவைப்பட்டபோதே இதெல்லாம் தெரியவில்லையா?.

2014-ல் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.168 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அப்படி என்ன திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது? திமுக-பாஜகவினர் வெளியே எதிரியாகவும், உள்ளே உறவாகவும் உள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை உழைக்காமல் கட்சிப் பதவிக்கு வந்தவர். அவருக்கு வாய்தான் முதலீடு. அதனால், தலை,கால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயலுக்கு எந்த நிவாரணமும் அவர் வாங்கித் தரவில்லை. அதிமுக எதிர்க் கட்சியாக இருந்தாலும், மாநில உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in