Published : 26 Aug 2024 04:33 AM
Last Updated : 26 Aug 2024 04:33 AM
சென்னை: சென்னை போக்குவரத்து போலீஸார் ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக, விபத்துகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 6 நாட்கள் எந்த விபத்தும் நிகழாமல் ‘ஜீரோ உயிரிழப்பு’ நாட்களாக அமைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையை சாலை விபத்துகள் இல்லாத நகரமாக மாற்றும் நோக்கில் ‘விபத்து இல்லா தினம்’ (ஜீரோ ஆக்சிடென்ட் டே) என்ற பெயரில் 20 நாள் தொடர் விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டனர்.
இதையொட்டி, அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர், ஆட்டோ ஓட்டுநர், உணவு டெலிவரி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 41 உயிரிழப்புகள் பதிவான நிலையில், இந்த ஆண்டில் போக்குவரத்து போலீஸாரின் தொடர் விழிப்புணர்வால் இந்த எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்து எண்ணிக்கை 31.7 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. தவிர, விபத்துகளும் கடந்த ஆண்டைவிட 61.6 சதவீதம் குறைந்துள்ளது.
போக்குவரத்து போலீஸாரின் இந்த விழிப்புணர்வு பிரச்சார காலத்தில், சென்னை சாலைகளில் உயிரிழப்பு எதுவும் நிகழாமல், 6 நாட்கள் ‘ஜீரோ உயிரிழப்பு’ நாளாக அமைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் அவசியத்தை மையமாக கொண்டு போக்குவரத்து காவல் துறை சார்பில் இன்ஸ்டாகிராம் (Instagram) ரீல்ஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் நேற்று ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், 50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT