Published : 26 Aug 2024 04:47 AM
Last Updated : 26 Aug 2024 04:47 AM

கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் விஜிபி கோல்டன் பீச் ரெசார்ட் மற்றும் விஜிபி ஹவுசிங் நிறுவனம் ஆகியவை ஆக்கிரமித்திருந்த இடங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழித்தடமாக மாற்ற கடந்த 2005-ம் ஆண்டு முடிவெடுத்து, இதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கியது. ஆனால், நில எடுப்பு உள்ளிட்டவற்றால் பணிகள் தாமதமானது.

இந்நிலையில், தற்போதைய திமுக அரசு 2023-ல் இப்பணிக்காக ரூ.940 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, தற்போது நிலம் தேவைப்படும் இடங்களில் அவற்றை கையகப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கொட்டிவாக்கம் முதல் அக்கரை வரை, நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த 6 வழிச்சாலையில் விஜிபி நிறுவனத்தின் இடங்கள் வருவதால், அந்த நிலங்களை கையகப்படுத்த அந்நிறுவனத்துக்கு ரூ.50 கோடிக்கும் மேல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகை பெற்ற பின்னரும் அந்நிறுவனம் இடத்தை வழங்காத நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பின், தற்போது விஜிபி மரைன் கிங்டம் முதல் விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் விஜிபி கோல்டன் பீச் ரெசார்ட் மற்றும் விஜிபி ஹவுசிங் நிறுவனம் ஆகியவை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டது. இதை மீட்க நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது.

வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கடந்த ஆக.14-ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்புகளை அந்நிறுவனம் அகற்றாத நிலையில், கடந்த ஆக.23-ம் தேதி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜகணபதி, உதவி கோட்ட பொறியாளர் தீபக், வருவாய் ஆய்வாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x