Published : 26 Aug 2024 05:18 AM
Last Updated : 26 Aug 2024 05:18 AM
சென்னை தினத்தையொட்டி, போட்டியாளர்கள் செல்லுமிடத்தை அறிய புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியை மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்க 2 அல்லது 3 பேர் கொண்ட குழுக்களாக பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றன.
முதல்கட்டமாக நேற்று பிற்பகல் 3 மணியளவில் அனைவரும் பல்லவன் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு காகிதத்தில் ஒரு புதிர் கொடுக்கப்பட்டது. அதில் எல்ஐஇ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் அவர்கள் அடுத்துச் சென்றடைய வேண்டிய இடத்தை கண்டறிய வேண்டும். இதில் இ என்னும் எழுத்தில் நடுவில் உள்ள கோட்டை நீக்கினால் எல்ஐசி என்ற இடம் வரும் என போட்டியாளர்கள் கண்டறிந்தனர்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட புதிர்கள் மூலம் அடுத்தடுத்துச் செல்ல வேண்டிய இடங்களைகண்டறிந்து அனைத்து பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகளிலேயே போட்டியாளர்கள் பயணித்தனர். இறுதியாக அண்ணா சதுக்கத்தில் போட்டி நிறைவடைந்தது. இதில் முதலாவதாக வந்த விவேக், பிரவீன் ஆகியோரின் ஈகிள் என்ற குழுவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சேஷ கிருஷ்ணன், பிறைசூடன், சூர்யவர்மன் ஆகியோரின் பிரசிடென்சி பாய்ஸ் குழுவுக்கு இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம், சுரேஷ் பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்ற மதுரை மாவெரிக்ஸ் குழுவுக்கு மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து சேருமிடத்தை அடைந்த 7 பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 'சென்னை ஃபிரம் தி ஜன்னல் சீட்' என்ற புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT