Published : 07 Jun 2018 06:08 PM
Last Updated : 07 Jun 2018 06:08 PM

‘காலா’வுக்கு பெருமை: சவுதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்தியப் படம்

 ‘காலா’ படம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் சில பெருமைகளையும் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையை ‘காலா’ பெற்றுள்ளது.

சவுதி அரேபியா ஒரு தீவிர இஸ்லாமிய நாடு. ஷரியத் சட்டப்படி இயங்கும் சவுதி அரேபியாவில் பல கட்டுப்பாடுகள் உண்டு. அதில் சினிமாவுக்குத் தடை என்பதும் ஒன்று. அங்கு லட்சக்கணக்கான தமிழர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் எதையும் காண முடியாது. டிவி நிகழ்ச்சிகள் மூலமே காண முடியும். அதற்கும் கட்டுப்பாடு உண்டு.

தமிழ்த் திரைப்படங்களை சிடிக்கள் மூலமே அவர்கள் காணமுடியும், அல்லது படம் வெளியாகும் அன்று சவுதியின் பக்கத்து நாடான துபாய், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்று படம் பார்க்கலாம். மேற்கண்ட இரண்டு நாடுகளிலும்  இது போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. துபாய் ஐக்கிய அரபு எமிரேட்டில் சினிமா நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடக்கும்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் அதன் இளவரசர் சமீபத்தில் பல கட்டுப்பாடுகளை தளர்த்தினார். பெண்கள், விளையாட்டில் பங்கு பெறலாம், வாகனம் ஓட்டலாம், சினிமா போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை என்ற உத்தரவால் மீண்டும் சவுதியில் திரைப்படம் வெளியாகும் நிலை ஏற்பட்டது.

1980-களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாக வந்த அறிவிப்பை அடுத்து தலைநகர் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. அதில் முதல் படமாக ‘பிளாக் பாந்தர்’ என்ற ஹாலிவுட் படம் திரையிடப்பட்டது.

சவுயில் இந்தி பேசுவோர், பாகிஸ்தானியர் அதிகம். அவர்கள் இந்திப்படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் தமிழர்களும் அதிகம் என்ற நிலையில் வுண்டர்பார் நிறுவனம் சவுதியில் ‘காலா’ படத்தை வெளியிட்டது.

இன்று சவுதி அரேபியாவிலும் 'காலா' படம் வெளியானது.சவுதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையை ‘காலா’ பெற்றது. இத்தகவலை ’காலா’ படத்தைத் தயாரித்துள்ள ‘வுண்டர்பார்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x