பெரியாறு அணை தொடர்பான வதந்தியை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

பெரியாறு அணை தொடர்பான வதந்தியை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து வதந்தி பரப்பப்படுவதைக் கண்டித்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் விவசாயிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடுக்கி எம்.பி. குரியகோஸ் உள்ளிட்ட கேரள எம்.பி.க்கள் சிலர்,`பெரியாறு அணை உடையப்போகிறது. எனவே, பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்' என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவந்தனர். அதேபோல, சில அமைப்பினரும் பெரியாறு அணை குறித்து சமுக வலைதளங்களில் தவளான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இதைக் கண்டித்து பெரியாறு வைகைப் பாசன விவசாய சங்கம் சார்பில் உத்தமபாளையத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர்பொன்காட்சிக் கண்ணன் தலைமை வகித்தார். வழிகாட்டுக் குழுத் தலைவர் சலேத்து, போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் பேசும்போது, "இது கேரள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. அணை குறித்து வதந்தி பரப்புபவர்களைக் கண்டித்துதான் போராட்டம் நடத்துகிறோம். தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், முல்லைபெரியாறு அணை உடையப்போகிறது என்று கேரளாவில் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் அதையே மேற்கொள்கின்றனர்.

மேலும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் அதிருப்தியில் உள்ள கேரள மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக, பெரியாறு அணை குறித்த பொய் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை கேரள அரசு கட்டுப்படுத்த வேண்டும்" என்றார். இந்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in