

சென்னை: வங்கதேச கலவரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆக.27-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில வாரங்கள் முன்பு வங்கதேசத்தில் ஏற்பட்ட சிறு குழுக்களின் கலவரம், இனக் கலவரமாக, மதக் கலவரமாக மாறியது. கலவரக்காரர்கள் அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்து கோயில்களை, இந்திய கலாச்சாரம் மையங்களை தீக்கிரையாக்கிய செய்திகள் பலவும் ஊடகங்களில் வெளி வந்தன. இது தொடர்ந்து நடப்பது கவலை அளித்தது.
இத்தகைய சூழலில் வங்கதேச இந்துக்களை பாதுகாத்திட இந்து முன்னணி மத்திய அரசை வலியுறுத்தியது. மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.மேலும், வங்கதேசத்தில் நடக்கும் இன, மத கலவரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையில் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்த நிலையில் தற்போது நீதிமன்றம் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வருகின்ற ஆகஸ்ட் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் 27-ம் தேதி மதியம் 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக அரசும், காவல்துறையும் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நீதிமன்ற வழிகாட்டுதலை மதித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.