Published : 24 Aug 2024 06:11 AM
Last Updated : 24 Aug 2024 06:11 AM
பழநி: இந்து சமய அறநிலையத் துறைசார்பில் பழநியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இன்று காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. காலை 8.55 மணிக்கு 100 அடி கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். கண்காட்சியை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.
காலை 9.30 மணிக்கு மாநாட்டுதொடக்க நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம்சாந்தலிங்க மருதாசல அடிகள்,திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நீதிபதிகள் சுப்ரமணியன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்படுகிறது.
மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம், 500 பேர் சாப்பிடும் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகனின் பெருமைகள் கூறும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், அறுபடை வீடுகண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு முடிந்து ஒருவாரத்துக்குக் கண்காட்சியை பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மாநாடு நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள், மாநாடு வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோரைஅழைத்துச் செல்ல 10 பேட்டரிகார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகளை 22 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. மாநாட்டையொட்டி 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தமாநாட்டை முன்னிட்டு பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT