

காஞ்சிபுரம்: ஆட்சியர் சினேகா வெளியிட்ட அறிக்கை: 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், வாக்குப் பதிவின் போது ஆள் மாறாட்டத்தைத் தவிர்க்கவும், உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்தவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் ஏறத்தாழ 100% பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வரும் போது இந்த அட்டையை முதன்மை ஆவணமாகக் கொண்டு வர வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டும், அதனைத் அளிக்க இயலாத வாக்காளர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை (ஆயுஷ்மான் பாரத்), ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப் பட்ட திறனட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மற்றும் மாநில அரசுகள் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் சமூக நீதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக் கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சுப் பிழைகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் வேறொரு தொகுதியின் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் பொருந்தாத காரணத்தால் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத பட்சத்தில் மட்டுமே மாற்று ஆவணம் கோரப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசல் கடவுச் சீட்டு மட்டுமே சான்றாகும்.