

சென்னை: நிதி, சுகாதாரத் துறைச் செயலர்கள் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கும், 6 பேர் முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கும் தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு காலி பணியிடங்களுக்கு ஏற்ப பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, நிதித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன், மத்திய அரசுப் பணியில் உள்ள ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்திரமோகன் ஆகியோர், முதன்மைச் செயலரில் இருந்து கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், மனித வளமேலாண்மைத் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி, முதல்வரின் செயலர் நிலை-2 ஆக உள்ள எம்.எஸ்.சண்முகம், பொதுத் துறைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், சமூக நலத் துறைச் செயலர் ஜெய முரளிதரன் ஆகியோர் முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.