Published : 24 Aug 2024 05:09 AM
Last Updated : 24 Aug 2024 05:09 AM
சென்னை: மனநல பாதிப்பு பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தேசிய சுகாதார திட்டத்தின் தமிழக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்கார்ஃப்) சார்பில் இந்த நோய் தொடர்பான 11-வது சர்வதேச மாநாடு (ஐகான்ஸ்) சென்னை சவேரா ஓட்டலில் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய சுகாதார திட்டத்தின் தமிழக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது: வயது, பாலினம், வாழும் சூழல்என பல்வேறு வகையில் மனநல பாதிப்புக்கு ஆளாகும் நபர்களுக்கான தீர்வும் வெவ்வேறாக இருக்கும். அதற்கேற்ப பல்வேறுமுயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
உதாரணமாக, பிரசவத்துக்கு பிறகான தாயின் மன அழுத்தத்துக்கு தீர்வுகாண, ஆரம்ப சுகாதார மருத்துவஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக எங்களது உதவி எண்ணில் தினமும் 5 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன.
அதில், குழந்தைகள் சார்ந்தவற்றை குழந்தைகள் நலத் துறைக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு மனநலத்தை காக்க பல துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியம். அதேநேரம், சமூக அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, அரசின் முக்கிய திட்ட உருவாக்கத்தின்போது அமைப்புகள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், ஸ்கார்ஃப் அமைப்பின் இயக்குநர் ஆர்.பத்மாவதி, துணைத் தலைவர் ஆர்.தாரா, மேலாண்மை குழு உறுப்பினர் கிரிஜா வைத்தியநாதன், நிறுவன உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாடு இன்று நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT