Published : 24 Aug 2024 05:04 AM
Last Updated : 24 Aug 2024 05:04 AM

ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டப்பேரவை செயலகத்துக்கு சுழற்கோப்பை

சென்னை: ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டப்பேரவை செயலகத்துக்கு சுழற்கோப்பையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பேரவைசெயலர் கி.சீனிவாசனிடம் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஆட்சிமொழிச் சட்டத்துக்கு இணங்க அரசின் நிர்வாக மொழியாகத் தமிழ்மொழிஇருந்து வருகிறது.

ஆட்சிமொழிச் சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளின்படி, அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாக அலுவல்களில் முழுமையாக தமிழ்மொழியைப் பயன்படுத்தும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் லட்சிய இலக்கை அடைய தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன.

ஆய்வுப் பணிகள்: தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாயப் பணியான ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கப் பணியை மேன்மையுறச் செய்ய, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலரால், தலைமைச் செயலகத் துறைகளிலும், தமிழ் வளர்ச்சி இயக்குநரால் துறைத் தலைமை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இத்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்கள், மாவட்ட உதவி இயக்குநர்கள் ஆகியோர் மாவட்ட நிலை மற்றும் சார்நிலை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 2022-ம் ஆண்டுக்கான ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க ஆய்வு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் தலைமையில், தலைமைச் செயலக அலுவலகங்களில் நடைபெற்றது. அவற்றுள், தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தலைமைச் செயலகச் சட்டப் பேரவைச் செயலகம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான சுழற்கோப்பையை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேற்று சட்டப்பேரவை செயலர்கி.சீனிவாசனிடம் வழங்கினார். நிகழ்வில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் வெ.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஔவைஅருள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x