Published : 24 Aug 2024 05:36 AM
Last Updated : 24 Aug 2024 05:36 AM

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து மின் பழுது பார்க்கும் ஊழியர்களின் புகைப்படத்தை செயலியில் பதிவேற்றுவதில் சிக்கல்

சென்னை: மின் பழுதை நீக்கும் பணியில் ஈடுபடும் மின்வாரிய களப்பணியாளர்கள் எர்த் ராடு, கையுறை உள்ளிட்ட உரிய பாதுகாப்பு சாதனங்களை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் லைன்மேன்கள், ஃபோர்மேன்கள் மற்றும் உதவியாளர்கள் சிலர் எந்த பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால், சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை தடுக்கும் நடவடிக்கையாக செயலி ஒன்றை கடந்த ஆண்டு மின்வாரியம் உருவாக்கியது. அதில், பழுதுநீக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், உரிய பாதுகாப்பு சாதனங்களை அணிந்து அவற்றை புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், கடந்த மாதம் ஒரு புகைப்படம் கூட இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, மின்ஊழியர்கள் கூறும்போது, ‘ஊழியர் பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலான இடங்களில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பழுது பார்க்கும் சூழலில், அவரால் பணி செய்யும்போது புகைப்படம் எடுத்து அனுப்ப முடிவதில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 2,817 பிரிவு அலுவலகங்களில் 788 அலுவலகங்களில் இருந்து கடந்த மாதம் ஒரு புகைப்படம் கூட பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதற்கென கூடுதல் ஊழியர்களை நியமித்தால்தான் புகைப்படம் எடுத்து முறையாக செயலியில் பதிவேற்றம் செய்ய முடியும்’ என்றனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புகைப்படம் எடுக்க கூடுதல் ஊழியர்களை பணியமர்த்துவதா அல்லது அயல்பணி மூலம் ஊழியர்களை நியமனம் செய்வதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x