Published : 24 Aug 2024 06:15 AM
Last Updated : 24 Aug 2024 06:15 AM
சென்னை: தமிழகத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 30 வயது வரையுள்ள பெண்கள் என மொத்தம் 2.70 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை செனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டு, மாணவர்களுடன் உறுதிமொழியை ஏற்று, அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
தொடர்ந்து, தஞ்சாவூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக நடைபெறவுள்ள கருத்தரங்கத்துக்கான கருத்துரு மற்றும் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் 8 கிமீ நடைப்பயணம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.
அப்போது, மாநில அளவில் அனைத்து துறைகளும் கலந்து கொண்ட தமிழக சுற்றுலா பொருட்காட்சியில், மருத்துவத் துறை அரங்கு பெற்ற முதல் பரிசை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம் அமைச்சரிடம் ஒப்படைத்தார்.
அதன் ஒருங்கிணைப்பு பணியில் சிறந்து விளங்கியதற்கான விருதை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை துணை இயக்குநர் நாகராஜன் பெற்றார்.
நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதத்தில் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.70 கோடி பேர் பயனடையும் வகையில் அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு வரும் 30-ம் தேதி கொடுக்கப்படும்.
இப்பணியில் 1,30,550 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நமக்கு குடற்புழு இருக்கிறதா, நாம் ஏன் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்கின்ற சந்தேகம் ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனமே இன்று 24 சதவீத மக்கள் மண் மூலம் பரவக்கூடிய குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குடற்புழு என்பது ஓர் ஒட்டுண்ணி. இது மனிதனின் குடற்பகுதியில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
குடற்புழுக்கள் உருவாவதைத் தவிர்க்க திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கை, கால்களை நன்றாக கழுவும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். உணவுக்கு முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் கையை சுத்தமாக கழுவும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT