

1,6,9-ம் வகுப்பில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தின் விலையை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாற்றியமைக்க அரசு உத்தரவிட்டது. மேலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழு அரசின் சார்பில் அமைக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த பேராசிரியர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையில் 9 கல்வியாளர்கள், அறிஞர்கள் அடங்கிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் உயர்மட்டக் குழு, கலைத் திட்டக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. உரிய வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்டு மாநிலம் முழுவதும் மண்டல வாரியாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது.
2018-19 ஆம் கல்வியாண்டிற்கென முதல் கட்டமாக 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் எழுத பாடவாரியாக பேராசிரியர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய பாடம் எழுதும் குழு அமைக்கப்பட்டது. இதன்படி எழுதப்பட்ட பாடப் புத்தகம் மேலாய்வாளர்கள் மூலம் மேலாய்வு செய்யப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட பாடப் புத்தகம் சிறப்பு அம்சங்களுடன் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகம் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்க வகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. கியூ.ஆர்.கோடு போன்ற சிறப்பு அம்சங்களுடன் பாடப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் வழக்கமாக அச்சிடப் பயன்படுத்தப்படும் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் 80 ஜி.எஸ்.எம். ஹைடெக் மேப் லித்தோ தாளுக்குப் பதிலாக தரம் உயர்ந்த தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத்தின் 80 ஜி.எஸ்.எம். எலிகண்ட் தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11-ம் வகுப்பு பாடப் புத்தகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 60 ஜி.எஸ்.எம். தாளில் ஒரு வண்ண அச்சுக்குப் பதிலாக, 4 வண்ணங்களில் வண்ணமயமாக அச்சிடப்பட்டுள்ளன.
பாடப் புத்தகத்திற்கான மேலட்டை தமிழ்நாடு காகித நிறுவனத்தின் 230 ஜி.எஸ்.எம். என்னும் தரம் உயர்த்தப்பட்ட மேலட்டையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி பாடபுத்தகத்தின் மேலட்டைகள் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்த புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1,6,9,11- ம் வகுப்புகளுக்குரிய விலையில்லாப் பாடப் புத்தகம் பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1,6,9 வகுப்புகளுக்கான விற்பனைப் பாடப் புத்தகம் விற்பனை கடந்த 24-ம் தேதி தொடங்கப்பட்டது. 11-ம் வகுப்புகளுக்கான விற்பனைப் பாட புத்தகங்கள் ஜூன் 2 வது வாரத்தில் விற்பனை தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் புதியப் பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விபரம் வருமாறு,:
1-ம் வகுப்பு முதல் பருவத்திற்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.80, முதல் பருவம் தொகுதி 2 (கணக்கு,சுற்றுசூழல் அறிவியல்) ரூ.70, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கான தமிழ் புத்தகம் ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்திற்கான தொகுதி 1 (தமிழ், ஆங்கிலம்), தொகுதி 2-ல் கணக்கு ஆகிய புத்தகங்கள் தலா ரூ.90, தொகுதி 3-ல் (அறிவியல், சமூக அறிவியல்) ரூ.120, சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.120 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்திற்கான தொகுதி 1 (தமிழ், ஆங்கிலம்) ரூ.120, தொகுதி 2 கணக்குப் புத்தகம் ரூ.100, தொகுதி 3-ல் (அறிவியல்) ரூ.130, தொகுதி 4-ல் சமூக அறிவியல் புத்தகம் ரூ.150, சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.150 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தின் தலைப்புகள் இறுதியாக முடிவு எடுக்கப்படாததால் விலையை தற்பொழுது அறிவிக்கவில்லை. இதற்கான விலை விரைவில் அறிவிக்கப்படும்.
1,6,9 ஆகிய வகுப்பிற்கு மட்டும் புதிய பாடப் புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வகுப்பிற்கு அதேவிலையில் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில் பிற வகுப்பிற்கான பாடப் புத்தகத்தின் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.