“கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தந்தை, மகன் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுகிறது” - அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா? அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, சிவராமன் மற்றும் அவரது தந்தை, இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று (ஆக.23) காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்துக்கு இடமானவையாக இருக்கின்றன.

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா? அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு சந்தேகங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ளார். அதன் விவரம்: ‘கிருஷ்ணகிரி வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை காக்க முயற்சி?’ - சிவராமன் மரணமும், இபிஎஸ் கேள்விகளும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in