

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் கிடைக்கும் முறை புதுவை துறைமுகத்திலுள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தங்களின் தேவைக்கு போக மீனவர்களுக்கும், அருகிலுள்ள அலுவலகங்களுக்கும் இலவசமாக வழங்குவதால் இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படை அலுவலகம் உள்ளது. இங்கு ஆகாஷ் கங்கா என்ற புதிய குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இக்குடிநீர் மிக தூய்மையாகவும் சுத்தமாகவும் உள்ளது. குறிப்பாக அலுவலக பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல் மீனவர்களின் குடிநீர் தேவையையும் இத்திட்டம் பூர்த்தி செய்கிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி கடலோர காவல்படை கமாண்டர் சோமசுந்தரம் தி இந்துவிடம் கூறும்போது:
தேங்காய்த்திட்டு துறைமுகத் தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்துக்கு முதலில் தண்ணீரை வெளியில் இருந்து வாங்கி வந்தோம். கடந்த நவம்பரில் ஆகாஷ் கங்கா திட்டத்தை தொடக்கினோம். காற்றின் ஈரப்பதத்தில் இருந்தே குடிநீர் பெறப்படுகிறது. இப்பகுதியில் அதிக ஈரப்பதம் இருப்பதால் குடிநீர் ஆதாரம் தனியாக தேவையில்லை. மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் குடிநீர் பெறப்படுகிறது. தண்ணீர் சுவையாகவும், தூய்மையாகவும் இருக்கும். தண்ணீரை பரிசோதித்து பார்த்து, அதில் தாதுக்களை (மினரல்) மட்டும் சேர்ப்போம். மிக, மிக தூய்மையாக இருக்கும். நாளொன்றுக்கு 160 லிட்டர் வரை தூய குடிநீர் கிடைக்கும்.
இதனால் மீனவர்களும் இங்கு தண்ணீர் எடுத்து செல்கின்றனர். மீன்பிடிக்க செல்வோர் பலரும் இங்கிருந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். அருகிலுள்ள அலுவலகங்கள், மரைன் போலீஸாரும் இக்குடிநீரை விரும்புகின்றனர். இத்திட்டத்துக்கு மாதம் ரூ.4 ஆயிரம் செலவாகிறது என்று குறிப்பிட்டார்.
மீனவர்கள் தரப்பில் கூறும்போது: மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது கடலோர காவல்படை அலுவலகத்தில் இருந்து தற்போது தண்ணீர் பிடித்து செல்கிறோம். தண்ணீர் சுவையாக இருக்கிறது. எங்கள் பகுதிக்கு தண்ணீர் பந்தலாக கடலோர காவல்படை அலுவலகம் உள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.