Published : 03 May 2018 06:21 PM
Last Updated : 03 May 2018 06:21 PM

ஒரு தடவை ரூ.50 ஆயிரம் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு; செல்போனில் டாக்டரை மிரட்டும் எத்திக்ஸ் ரவுடி- வைரலாகும் ஆடியோ

பல் மருத்துவர் ஒருவரை செல்போனில் மிரட்டும் மர்ம நபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும், 50 ஆயிரம் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தரப்படும் என்றும் மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சோழிங்கநல்லூர், ஈசிஆர் சாலையில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் கட்டைக்குரலில் சினிமா வில்லன் போல் பேசும் ஒருவர், 'உன்னைப் பற்றி அனைத்து தகவல்களையும் சேகரித்துவிட்டோம் உன்னை கொல்ல முடிவெடுத்துவிட்டோம். கொல்லாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் உடனடியாகத் தரவேண்டும்' என்று மிரட்டுகிறார்.

'பணம் ஒரு மேட்டரா? பணத்தைக் கொடுத்துட்டு குடும்பத்தோடு சந்தோஷமாக இரு. அதன் பின்னர் வாழ்நாள் முழுதும் நாங்கள் பாதுகாப்பு தருவோம்' என்று லைஃப் பாலிசி ஒன்றையும் கொடுக்கிறார். இது குறித்து மிரட்டப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

கானாத்தூர் காவல் எல்லையில் வசிக்கும் பல் மருத்துவர் ஹரீஷ் என்பவரை இதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸாரைக் கிண்டலடிக்கும் அந்த நபர் சினிமா படம் போல் தன்னைப்பற்றியும் கொலை செய்வது பற்றியும் கூறுவது பரபரப்பாகி வருகிறது.

அவர்களது ஆடியோ பேச்சு விவரம்:

மர்ம நபர்: இதப்பாரு என்னை ரொம்ப தொடர்ந்து வர வைக்காத, இதனால உனக்கு தேவை இல்லாத பிரச்சினை வரும். உன்னோட நிம்மதி பறிபோகும். எல்லாமே பறிபோகும் உன் வாழ்க்கையில.

டாக்டர்: சரி, ஒரு லட்சம் எல்லாம் புரட்ட முடியாது. கொஞ்சம் டைம் கொடுங்க

மர்ம நபர்: உன்னால எவ்வளவு முடியும். இங்க பாரு உன் சர்க்கிளில் நாங்க எவ்வளவோ டாக்டரை மூவ் பண்ணியிருக்கேன். சில பேரைக் கொலை பண்ணியிருக்கோம். சிலர் பணம் தருகிறேன்னு போலீஸுக்குப் போவானுங்க. போலீஸ் என்ன செய்யும் நெட்வொர்க்கை வைத்துப் பிடிக்கிறோம் என்று ஒரு இடத்துக்கு வரச்சொல்வார்கள்.

சொல்ற இடத்துக்கு வந்தால் அங்கு போலீஸ் பிடிப்பதற்கு ரெடியா இருப்பார்கள். எலியைப் பொறி வைத்து பிடிப்பது போல். இங்க பாரு, என்னால உன்னை சும்மா போன் செய்து உன்னை மிரட்டிக்கொண்டே இருக்க முடியாது. நான் பக்காவா பிளான் பண்ணிட்டேன். உன்னைக் கொலை பண்ண பக்காவா பிளான் பண்ணியிருக்கேன். நீ பணம் தரலன்னா போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்.

அப்புறம் உன்னை சாம்பிளா வச்சு உன் சர்க்கிள்ல இருக்கிற மத்த டாக்டர்களை மூவ் பண்ணிக்குவோம். நீ சந்தோஷமா இருக்கணும்னா எனக்குத் தேவையான பணத்தை கொடுத்துவிட்டு நிம்மதியா இரு. அதுக்குப் பிறகு உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். நீ நினைக்கலாம் பணத்தை வாங்கிட்டு திரும்ப திரும்ப கேட்பார்களோ என்று.

ஆனால் எனக்குன்னு ஒரு எத்திக்ஸ் இருக்கு. எனக்கு பின்னாடி ஒரு டீம் இருக்கு எத்திக்ஸ் படி கரெக்டா ஃபாலோ பண்ணுவாங்க. உனக்கு 100% அஷ்யூரன்ஸ் தருகிறேன். அதற்கு பிறகு எங்களால் உனக்கு எந்தப் பிரச்சினையும் வராது.

டாக்டர்: என்னிடம் இப்போது 10 ஆயிரம் மட்டும் தான் இருக்கும்.

மர்ம நபர்: எவனையாவது ஒரு லட்சம் கேட்டா 50 ஆயிரம் தருவேன்னு சொல்வானுங்க. ஆனால் கேவலம் 10 ஆயிரத்துக்கு எல்லாம் உன்னை கொலை பண்ணாம இருக்க முடியாது. ஏன்டா நான் என்ன உன் கிட்ட பத்து லட்சமா கேட்டேன். உன் மனைவி கழுத்திலிருந்து செயினைப் பறித்துச்சென்றால் எவ்வளவு வரும், பேப்பர் பார்க்கவில்லையா? 50 ஆயிரம் ரூபாய் எல்லாம் உண்மையில் பெரிய பணம் கிடையாது.

டாக்டர்: சரி 50 ஆயிரம் ரூபாய் நாளை ஏற்பாடு செய்து தருகிறேன்.

மர்ம நபர்: நாளைக்கு எல்லாம் இல்லை, அது ரொம்ப லாங் டைம். எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறாயோ அந்தளவுக்கு எங்கள் கிரிமினல் மூளை வேலை செய்யாமல் இருக்கும். உன்னை முடிச்சுட்டு ஏகப்பட்ட டாக்டர்கள் பென்டிங்கல இருக்காங்க. அவங்களை எல்லாம் முடிக்கணும். நான் எவ்வளவு பொறுமையா, சாஃப்டா பேசுறேன். நீபாட்ல இஷ்டத்துக்கு முடிவெடுத்து பேமிலியில யாரையாவது இழந்துடாத.

டாக்டர்: எனக்காக ஒருநாள் வெயிட் பண்ணுங்க. பணம் திரட்டணும்.

மர்ம நபர்: உன் மனைவி கழுத்தில் செயின் போட்டிருக்கா, வீட்ல நகை இருக்கு எல்லாமே இருக்கு, சொந்தமா கிளினிக் வச்சிருக்கிற, உன்னால 50 ஆயிரம் ரூபா புரட்ட முடியாதா? என்னடா நீ என்கிட்ட வந்து காதுல பூ சுத்துற.

டாக்டர்: சொந்த கிளினிக் என்றாலும் வாடகை வீட்டில் தான் நான் இருக்கிறேன்.

மர்ம நபர்: நான் அதைச் சொல்லலடா, இரண்டு பேரும் டாக்டரா இருக்கீங்க, என்னடா நீ.

டாக்டர்: ரெண்டு பேரும் டாக்டரா இருந்தாலும் நான் ஒருத்தர் தான் வேலை செய்றேன்.

மர்ம நபர்: உன் வீட்டில் வாசலில் ஒருத்தன், உன் கிளினிக்கில் ஒருத்தன் ஆளைப்போட்டு உன்னை ஃபாலோ பண்றதுக்கு எனக்கு எவ்வளவு செலவாகுது தெரியுமா? நீ டைம் கேட்க, கேட்க எனக்கு எக்ஸ்ட்ரா செலவு ஆகும் தெரியுமா? ஒண்ணு உன்னைக் கொலை பண்ணணும். உன்னை என்றால் உன்னை அல்ல உன் வீட்டில் ஒருத்தரை. அப்பத்தானே உனக்கு அந்த வலி தெரியும், கேவலம் 50 ஆயிரம் ரூபாய்க்காக குடும்பத்தில ஒருத்தர இழந்துட்டோம்னு உனக்கும் புரியும்.

50 ஆயிரம் ரூபாய்க்காக ஒருத்தரைப் போடுவார்களா? இது பிசினஸ்டா. நீ எப்படி நீ புரொபஷனலா தொழில் செய்கிறாயே. அதே போல் நாங்களும் பரொபஷனலா செய்வோம். எங்களோட பெரிய பிளஸ்ஸே ஒருத்தனைப் போட்டா யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. இந்த வழக்கை பத்து தனிப்படை போட்டாலும் எங்களை கண்டுபிடிக்க முடியாது.

அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையா? வழக்கு சிபிஐக்கு போகும். அங்கேயும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவழக்கைக் கண்டுபிடிக்க க்ளூ தேவை, அது கிடைக்காது. ஏனென்றால் நாங்கள் புரொபஷனலா தயார் ஆனவங்க. எவிடன்ஸ் கிடைக்காமல் செய்வோம். நீ ரொம்ப வருத்தப்படுவ. இன்று இரவுக்குள் பணத்தை ஏற்பாடு செய்.

டாக்டர்: எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க, பணம் கொடுத்த பின்னால் நீங்கள் தொந்தரவு செய்யமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

மர்ம நபர்: உன் சர்க்கிள்ல நான் எவ்வளவோ டாக்டர் மூவ் பண்ணியிருக்கேன். அவர்கள் நம்பரை கலெக்ட் செய்து எங்க போகிறார்கள், வருகிறார்கள் என்று ஒருவாரம் பின் தொடர்ந்து ஸ்கெட்ச் போட்டு கரெக்டா திட்டம் போட்டு பேசுவோம். அவர்கள் பணம் கொடுத்து எங்களுக்கு திருப்தியாச்சுன்னா எதுவும் செய்ய மாட்டோம்.

நீ பணம் கொடுத்து விட்டாயானால் லைஃப் லாங் எந்தப் பிரச்சினையும் உனக்கு வராது.மேற்கொண்டு பின்னாடி யாராவது உனக்கு பிராப்ளம் செய்தால் என் பிரைவேட் நம்பர் உனக்கு கொடுக்கிறேன், நீ என் கிளையண்ட் மாதிரி. உனக்கு எதாவது பிராப்ளம் என்றால் எனக்கு கால் பண்ணு, கண்டிப்பா நான் உனக்கு உதவி செய்வேன்.

டாக்டர்: சரி எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க

மர்ம நபர்: ஏன்டா ஹரீஷு, ஒரு நாள் அதிகம்டா, 24 மணி நேரம், உனக்காக ஆவின் கிட்ட வெயிட் பண்றேன். கொண்டுவந்து கொடுத்துட்டு போடா. 50 ஆயிரம் ஒரு பெரிய விஷயம் இல்லடா.

டாக்டர்: என்கிட்ட இப்ப பணம் இல்ல

மர்ம நபர்: 50 ஆயிரம் எல்லோரும் கையிலேயே வெச்சுக்கிட்டா சுத்துவாங்க. நிறைய நகை வச்சிருப்ப. போய் அதை அடகு  வெச்சு பணம் எடுத்துட்டு வாடா. எத்தனை டாக்டர்கள் நகையை வெச்சி பணம் கொண்டு வந்து கொடுத்திருக்காங்க தெரியுமா?

டாக்டர்: நகை எல்லாம் வங்கியில் இருக்கிறது

மர்ம நபர்: இதோ பார் நீ டாக்டர் உனக்கு நிறைய அறிவிருக்கும், ஆனால் கிரிமினல்ஸ் இன்டலிஜென்ஸ். இன்டலிஜென்ஸ் பீட்ஸ் த நாலட்ஜ். ஸோ உன்னோட நாலெட்ஜ யூஸ் பண்ணி எதாவது தப்பு பண்ணனும்னு நினைச்சேன்னா போலீஸ் உன் கம்ப்ளைண்ட எடுத்து என்னைப் பிடிக்க முடியாது.

எனக்கு எப்.ஐ.ஆர் பிடிக்காது. ஒருவேளை போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்தா எப்.ஐ.ஆர் போடுவார்கள். ஒருவேலை போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் என்னை கண்டுபிடிக்க முடியாது. என்னை என்றால் நான் மட்டுமல்ல, பெரிய டீமே இருக்கு. சந்தேகமிருந்தால் உன் கிளினிக் வெளியே வந்து பாரு அங்க ஒருத்தன் உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டிருப்பான்.

டாக்டர்: சரி நாளை கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன்.

மர்மநபர்: நாளைக்கு எப்ப தருவாய்?

டாக்டர்: நாளை சாயந்திரம் தருகிறேன்

மர்ம நபர்: சரி நாளை 2000 ரூபாய் நோட்டாக ரெடி செய்து வை. 2000 ரூபாய் நோட்டு 25 தான். அதை நீ சம்பாதிக்க பெரிய வேலை இல்லை. மூன்று பேர் பல்லைப் பிடுங்கினாலே அந்த தொகை வந்துவிடும்.

டாக்டர்: ஒரு பல்லை பிடுங்கினால் 300 ரூபாய், 500 ரூபாய் கிடைக்கும்

மர்ம நபர்: ஏன்டா ஒருத்தனுக்கு கிளிப் போடணும், ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னா 18 ஆயிரம் , 20 ஆயிரம் வாங்குகிறாய். என்னடா என்கிட்ட வந்து சொல்ற?

டாக்டர்: அதுக்கு ஏற்றார்போல் லேப் சார்ஜும் ஆகும் தெரியுமா?

மர்ம நபர்: ஏன்டா நான் ரெகுலர் பேஷன்ட்டைச்சொல்றேன், நீ ஒன் டைம் பேஷன்ட்டைச் சொல்கிறாய்.

டாக்டர்: சரி நாளைக்கு கொடுத்து விடுகிறேன்.

மர்ம நபர்: உன்னை நம்பலாமா?

டாக்டர்: நம்பலாம், ஆனால் அதற்குப் பிறகு தொல்லை கொடுக்கக் கூடாது.

100% பிராமிஸ் தர்றேன், எங்களால உனக்கு எந்த பிரச்சினையும் வராது. ஆனால் இதப்பத்தி உன் நண்பர்கள், சொந்தக்காரர்களை கன்சல்ட் செய்தால் உனக்கு நல்லா இருக்காது. அவர்கள் யோசனை சொல்லலாம், தப்பு இல்லை. ஆனால் வலி உனக்குத்தான் ஞாபகம் வச்சுக்க. சைலன்ட்டா முடிச்சுட்டு சந்தோஷமா இரு. என்ன புரியுதா?

டாக்டர்: சரி நான் நாளை கொடுத்து விடுகிறேன், உங்களை நம்பலாமா?

மர்ம நபர்: தாரளமா நம்பலாம், உலகத்திலேயே கொலையை விட மோசமான குற்றம் எது தெரியுமா, நம்பிக்கை துரோகம். அது எங்கள் ரத்தத்திலேயே கிடையாது. நீ நேர்மையாக நடந்துக்கிட்டா நாங்களும் நேர்மையா நடந்துக்குவோம்.

டாக்டர்: சரி நாளை தருகிறேன்

மர்ம நபர்: ஹரீஸ் வி டிரஸ்ட் யூ, டோண்ட் பி பெட்ராய்ட் ஓக்கே. வித் யுவர் மைண்ட் ஓக்கே

டாக்டர்: சரி சரி

இவ்வாறு அவர்கள் உரையாடல் முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x