அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கரூர் தனியார் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான தனியார் வங்கி தலைமை மேலாளரிடம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுப் பதிவு கடந்த ஆக.8-ம் தேதி பதிவு செய்யப்பட்ட நிலையில் சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகியிருந்தார். அமலாக்கத் துறை தரப்பில் ஏற்கெனவே சாட்சியம் அளித்திருந்த கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளரான ஹரிஷ்குமாரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமாரின் வங்கி கணக்கு விவரங்கள், வங்கி ஆவணங்கள், பணப் பரிவர்த்தனைகள், கவரிங் லெட்டர் தொடர்பான கேள்விகளுக்கு ஹரிஷ்குமார் பதிலளித்தார். இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் ஆக.28-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in