Published : 22 Aug 2024 06:49 AM
Last Updated : 22 Aug 2024 06:49 AM
சென்னை: தமிழக தொழில் துறையின் தொழில்வழிகாட்டி நிறுவனம் சார்பில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு முதலீட்டு மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. இதில், முதல்வர்ஸ்டாலின் பங்கேற்று, நிறைவுற்ற19 திட்டங்களை தொடங்கி வைத்தார். 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.9.94 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 19 வகையான திட்டங்களை ரூ.17,616 கோடிமதிப்பில் தொடங்கி வைத்துள்ளேன். இதன்மூலம் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51,157 கோடி. இதன்மூலம் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களை மட்டும் தொடங்கினால் போதாது. உங்களைபோன்ற மற்ற தொழிலதிபர்களையும் தமிழகத்துக்கு அழைத்து வந்து தொழில் தொடங்க செய்ய வேண்டும். தொழில் துறையின் தூதர்களாக மாற வேண்டும்.
இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களில், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானது. அனைத்து துறை, அனைத்து சமூகங்கள், அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறோம். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாழ்க்கை வசதி என்பதே அரசின் குறிக்கோள்.
மிகுந்த திறமை, படைப்பாற்றல் கொண்டவர்கள் தமிழக இளைஞர்கள். அவர்களது திறமைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT