Published : 22 Aug 2024 07:23 AM
Last Updated : 22 Aug 2024 07:23 AM
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2,000 கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வடசென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் சிக்கியுள்ளனர். இதனால், மத்திய அரசை ஆதரிக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டது. கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பாஜகவை அழைத்ததை பார்க்கும்போது, ஸ்டாலினின் தலைவராக மோடி மாறிவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.
தமிழகத்தில் பாஜகவுக்கு சொந்த காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது. அதிமுகவின் தயவில்தான் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு சென்றுள்ளனர். இப்படிப்பட்ட கட்சியின் தலைவர் அண்ணாமலை, இரட்டை இலை பற்றி பேசுவது விநோதமாக இருக்கிறது.
தமிழகத்தில் தொழில் துறையும் முடங்கியுள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரியசொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதன்மூலம் ரூ.2,000 கோடி பணம் கைமாறியதாகவும், இதில் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை மூலம் தமிழகம் முழுவதும் ‘அம்மா மருந்தகம்’ தொடங்கி செயல்பட்டது உலகத்துக்கே தெரியும். தமிழக சுகாதார துறை அமைச்சருக்கு மட்டும் தெரியாமல் இருப்பது வேடிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT