Published : 22 Aug 2024 05:05 AM
Last Updated : 22 Aug 2024 05:05 AM

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கைது

அரசு ஏற்றுக்கொண்டபடி 5 ஆண்டு பணி முடித்த பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு பன்னோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸார் அவர்களை கைது செய்தனர் .

சென்னை: அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்களில் தினக்கூலிஅடிப்படையில் 3,200 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.650 முதல்ரூ.700 வரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் சார்பில் அவர்கள்நேற்று காலை காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்குவதற்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் நுழைவு வாயிலை மூடி, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்ய தொடங்கினர். அப்போது, அவர்கள் அண்ணா சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “கடந்த10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். 2022-ல் நடந்தபோராட்டத்தின்போது, எங்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், இன்னும்எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இப்போது போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸார் எங்களை கைது செய்துள்ளனர். எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x