Published : 22 Aug 2024 06:11 AM
Last Updated : 22 Aug 2024 06:11 AM
சென்னை: வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அப்போது அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மனுவில் இடம்பெற்றிருப்பதாவது: 2017 - 2022 வரையிலான முதல் 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி மதிப்பீடுகளை புதிய அறிவிப்புகளுக்கு ஏற்ப மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு எதிரான அபராதம் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அரிசி, பருப்பு, சீரகம், கடுகு, மிளகு உள்ளிட்ட விவசாய உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மாவட்ட அளவிலான வணிகவரி ஆலோசனைக் குழு கூட்டங்கள் மாதந்தோறும் அல்லது காலாண்டு அளவில் நடத்தப்பட வேண்டும். வணிகர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி மையங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT