Published : 22 Aug 2024 04:47 AM
Last Updated : 22 Aug 2024 04:47 AM
சென்னை: சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பில், 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைதளம் மற்றும் 10 தளங்களுடன்கூடிய ஆண்கள் விடுதிகட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விடுதியில் 484 மாணவர்கள் தங்கும் வகையில், 121 அறைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், விடுதி வார்டன் அறை, சமையலறை, உணவருந்தும் அறை, பொருள் வைப்பறைகள், பன்னோக்கு அறை, நூலக அறை, உடற்பயிற்சி அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். வள்ளுவர் கோட்டத்தில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் ரூ.80 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
இவ்வளாகத்தில் உள்ள கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாகசுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைப்பாடுகள் புதுப்பித்தல், 2 புதிய கவின்மிகு நுழைவுவாயில் அமைத்தல், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை அமைத்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக மின் தூக்கி அமைத்தல், வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையம், மழைநீர் வடிகால் வசதி, நடைபாதை வசதி, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி-ஒலி காட்சி அமைத்தல், சிதிலமடைந்த மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள் மாற்றுதல், கூட்ட அரங்கம் மற்றும் குறள் மணி மாடத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துதல், தீ தடுப்பு வசதிகள்அமைத்தல், ஒலிபெருக்கி அமைப்புநிறுவுதல், நுழைவாயில் புதுப்பித்தல்பணி, உயர் அழுத்த மின் வசதி ஏற்படுத்துதல், 250 கே.வி.ஏ. ஜெனரெட்டர் மற்றும் சிசிடிவி பொருத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றையும் அமைச்சர் வேலு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT