Published : 23 May 2018 02:38 PM
Last Updated : 23 May 2018 02:38 PM

துப்பாக்கிச் சூடு; உளவுத்துறையின் தோல்வி, அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல்: ரஜினி கண்டனம்

 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினி அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிக் காட்சி ஒன்றைப் பதிவிட்டு கண்டித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறையை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அவரது பேச்சு விபரம்:

“ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல்துறையின் வரம்பு மீறிய, சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x