Last Updated : 23 May, 2018 10:24 AM

 

Published : 23 May 2018 10:24 AM
Last Updated : 23 May 2018 10:24 AM

திருவள்ளூர், பூவிருந்தவல்லி பகுதிகளில் 4 ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் தீவிரம்: ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்கிறது

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், 3, 427 சதுர கி.மீ. பரப்பளவில் சுமார் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது. இம்மாவட்டத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்வதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பூவிருந்தவல்லி ஆகிய இரு சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில், திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தின் கீழ், கடம்பத்தூர், திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 13 ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு நகர்ப்புற பகுதிகள் உள்ளன.

அதேபோல், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்தின் கீழ், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பூவிருந்தவல்லி, ஆவடி நகர்ப்புற பகுதி கள் அடங்கியுள்ளன.

திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தில், 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 265 துணை சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. அதேபோல், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்தில் 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 57 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படாத 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகைகள் கொண்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மாவட்ட சுகாதாரத் துறை சார்பில்அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அவ்வகையில், சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் 4 பகுதிகளில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், 2017-18-ம் நிதியாண்டில், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குருவாயல் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அயப்பாக்கம் ஆகிய இடங்களிலும், 2018-19-ம் நிதியாண்டில் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாலாபுரம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மோரை ஆகிய இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குருவாயல், அயப்பாக்கம் ஆகிய இரு இடங்களில், தலா ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டுமான பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. அப்பணி இன்னும் 6 மாதங்களில் நிறைவு பெறும்.

பாலாபுரம், மோரை ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்தால், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 68 ஆக உயரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x