Published : 21 Aug 2024 05:15 AM
Last Updated : 21 Aug 2024 05:15 AM

முன்னாள் தலைமை தளபதியின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடலுக்கு அவரது மனைவி ரூபா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: சென்னையில் காலமான இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி வகித்தவர் சுந்தரராஜன் பத்மநாபன்(83). இந்திய ராணுவத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றிய அவர் கடந்த 2002 டிச.31-ம் தேதி ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் சென்னை, அடையாறில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு ரூபா என்ற மனைவியும், ஸ்ரீனிவாஸ் என்ற மகனும், லஷ்மி சத்யநாராயணன் என்ற மகளும் உள்ளனர்.

இறந்த சுந்தரராஜன் பத்மநாபனின் உடலுக்கு இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ கவச வாகனத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அங்கு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய ராணுவ தலைமை தளபதி சார்பாகசென்னையில் உள்ள தக்ஷிணபாரத ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜென்ரல் கரன்பிர் சிங், துணை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் தருண்குமார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இந்தியக் கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் ரவி குமார் திங்ரா, சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் முழு ராணுவமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x