

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 7,420 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர்.
இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3 முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 42 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நிறுவியுள்ள உதவி மையங்கள் மூலமாகவும், வீடுகளில் இருந்தவாறும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் கணினி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் நேற்று மதியம் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் அன்பழகன் கூறும்போது, ‘‘ஆன்லைன் பதிவு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குறை கூறுகின்றனர். அது உண்மை அல்ல. ஆன்லைன் பதிவு முறை கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. தொடக்க நாளான இன்று (நேற்று) மதியம் 1 மணி நிலவரப்படி, 4,400 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 3,780 பேர் வீடுகளில் இருந்து பதிவு செய்தவர்கள். மற்றவர்கள் உதவி மையங்களுக்குச் சென்று பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் தனிப்பட்ட முறையில் 6,370 பேர், அண்ணா பல்கலை.யின் உதவி மையங்கள் மூலம் 1,050 பேர் என மொத்தம் 7,420 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். ஆன்லைனில் பதிவு செய்ய மே 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.