புதுசேரியில் செப்டம்பர் முதல் ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை வழங்கல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: செப்டம்பரில் ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை வழங்க அரசு திட்டமிட்டு டெண்டர் கோரியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசுக்கும், அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஏற்பட்ட மோதலால் ஆளுநர் உத்தரவுப்படி ரேஷன் கடைகள் மூடப்பட்டது. ரேஷன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் இதை விரும்பவில்லை. ஏனெனில் வெளிச் சந்தையில் அரிசி விலை கடுமையாக உயரத்தொடங்கியதால் ரேஷனில் அரிசி வழங்க பெண்கள் கோரத்தொடங்கினர்.

ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ரங்கசாமியிடம் ரேஷன் கடைகளை திறக்க பெண்கள் கேள்வி எழுப்பினர். தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் கோரினர். இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து. இதற்கான கோப்புக்கு முந்தைய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, ரேஷன் கடைகளை திறந்து மீண்டும் இலவச அரிசி அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுவையில் ஏழை மக்களுக்கான சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் இலவசமாகவே கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது சிகப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு கிலோ ரூ.1 விலையில் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது. இதோடு பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ரங்கசாமியும் பேரவையில் இத் தகவலை உறுதி செய்தார். இது பற்றி அரசு தரப்பில் விசாரித்தபோது இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறினர்.

சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறுகையில், "செப்டம்பர் மாதம் முதல் சிவப்பு அட்டையுள்ள ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசியும், மஞ்சள் அட்டை உள்ளவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் அரிசியும் வழங்கப்படும். அரிசியுடன் ரூ.60-க்கு பாமாயில், ரூ.20க்து துவரம் பருப்பு, ரூ.25-க்கு சர்க்கரை, உப்பு ஆகியவற்றை வழங்க அரசு டெண்டர் கோரியுள்ளது" என்று செல்வம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in