Published : 20 Aug 2024 07:22 AM
Last Updated : 20 Aug 2024 07:22 AM
உடுமலை: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ள நீர் அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம்உள்ளது. அங்கு தை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைகளும், அதன்நடுவே பாயும் பஞ்சலிங்க அருவியும் பிரசித்தி பெற்றவை.
கடந்த சில மாதங்களாகவே பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் நேற்று பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் பிற்பகல் 2 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகளையும் தாண்டியபடி வெள்ள நீர் தாழ்வான பகுதியை நோக்கிப் பாய்ந்தது.
பாலாற்றின் வழியாக கரைபுரண்ட வெள்ளம் மரம், செடி, கொடிகளுடன் கற்களையும் பெயர்த்தபடி திருமூர்த்தி அணையை சென்றடைந்தது. பாலாற்றின் நடுவேஅமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் வருவதை உணர்ந்த கோயில் ஊழியர்கள் முன்னதாக கோயில் உண்டியல்களை பாலிதீன்கவர்கள் கொண்டு மூடினர். அதனால் பக்தர்களின் உண்டியல்காணிக்கைகள் பாதுகாக்கப்பட்டன.
வெள்ள நீர் கோயிலைச் சூழ்ந்ததையடுத்து கோயிலின் நடை சாத்தப்பட்டது. கோயிலுக்கு செல்லும் பாதைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டன. அதேபோல அருவிக்குச் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘எதிர்பாராதவிதமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT