Published : 20 Aug 2024 04:45 AM
Last Updated : 20 Aug 2024 04:45 AM
சென்னை: மோசடி வழக்கில் சிக்கிய சினிமாஃபைனான்சியர் ஒருவரிடம் கையூட்டு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஒருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையரகம் 102 காவல் நிலையங்கள், 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்கள், 24 தனிப்பிரிவுகளுடன் 23,791 போலீஸாரை கொண்டு இயங்கும் பெரிய காவல் ஆணையர் அலுவலகமாகும்.
மோசடி புகார்கள்: ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட மோசடி புகார்கள், சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் உட்பட பல்வேறு குற்றங்கள் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதில், முறைகேடு நடப்பதாகவும், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கு பதிவு நிறுத்தம்: இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆணையர் அருண், மத்திய குற்றப்பிரிவை சீரமைக்கும் பணியை கையிலெடுத்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக தற்போது வழக்குப் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய விவகாரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், உதவி ஆணையர் ஒருவர், மோசடி வழக்கில் சிக்கிய சினிமா ஃபைனான்சியரிடம் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி ஆணையரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் அருண்உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT