Published : 20 Aug 2024 04:56 AM
Last Updated : 20 Aug 2024 04:56 AM
சென்னை: சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த இந்தியக் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிக்காக இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் ராகேஷ் பால் (59) சென்னை வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மரணம் அடைந்த ராகேஷ் பாலின் உடல் நேற்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இந்தியக் கடலோர காவல்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராகேஷ் பால், இந்திய கடலோர காவல்படையின் 25-வது தலைமை இயக்குநர் ஜெனரலாக கடந்த ஆண்டுநியமிக்கப்பட்டார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், 1989-ம் ஆண்டு இந்திய கடலோர காவல்படையில் பணியில் சேர்ந்தார்.
34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், இந்திய கடலோர காவல்படையின் சமர்த், விஜித், சுசேதா கிருபளானி, அகல்யாபாய் ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். இவரது சேவையைப் பாராட்டி 2018-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் உயரிய ‘தத்ரக் ஷக் விருது’ வழங்கப்பட்டது. மறைந்த ராகேஷ் பாலுக்கு தீபா பால் என்ற மனைவியும், ஸ்னேஹல் மற்றும் தாருஷி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT