Published : 20 Aug 2024 05:06 AM
Last Updated : 20 Aug 2024 05:06 AM

6 வழித்தட பணிகள் 2025 ஏப்ரலில் முடியும்: கிழக்கு கடற்கரை சாலையில் ஆய்வு செய்த அமைச்சர் வேலு தகவல்

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில் 15 கிமீ நீளம் கொண்ட இச்சாலையில், 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.

எனவே, இச்சாலையை கடக்க 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகின்றன. இச்சாலையில் தற்பொழுது 69 ஆயிரம் வாகனங்கள் தினசரி செல்கின்றன. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கிமீ தொலைவு சாலையின் இருபுறத்திலும் 347 சிறு சாலைகள், தெருக்கள் உள்ளன.

எனவே, இச்சாலையை எவ்வளவு அகலப்படுத்தினாலும், அதிகமான வாகனப் போக்குவரத்து காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் தொடங்கி எல்பி சாலைச் சந்திப்பு, கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை வழியாக உத்தண்டியில் முடிவடையும். இப்பகுதி வாழ் பொதுமக்களின் தேவை கருதி, எல்பி சாலைச் சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை சந்திப்பில் பாலத்தில் ஏறி அல்லது இறங்கிச் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங்களில் கடக்க இயலும். தற்போது, 6 வழிச்சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் நில எடுப்பு ஏதும் மேற்கொள்ளாமல், 18 மாதங்களுக்குள் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும்.

சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, கிழக்கு கடற்கரைச் சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழித் தடமாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் தொடங்கி, அக்கரை வரை 8.80 கிமீ தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழித்தடமாக அகலப்படுத்த நில எடுப்புப் பணிக்கு, ரூ.940 கோடிக்கு நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது.

திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய 6 கிராமங்களில் நில எடுப்புப் பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக அகலப்படுத்துவதற்கு கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.19 கோடியிலும், பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடியிலும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் பகுதிகளில் ரூ.135 கோடியிலும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியும்.

நில எடுப்பு செய்த இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவுற்ற இடங்களில் மின்வாரிய உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்ததும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும்.

இத்திட்டங்களை விரைவாகவும், தரத்துடனும் செயல்படுத்தி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, துறை செயலர் ஆர்.செல்வராஜ், தலைமை பொறியாளர் கு.கோ.சத்திய பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x