Published : 14 May 2018 08:07 AM
Last Updated : 14 May 2018 08:07 AM

ஓராண்டு ஆகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருந்து விஷால் விலக வேண்டும்: பாரதிராஜா, டி.ராஜேந்தர், ராதாரவி வலியுறுத்தல்

தயாரிப்பாளர் சங்கத் தலைவ ராகி ஒரு வருடம் ஆகியும், எந்த வாக்குறுதியையும் நிறைவேற் றாத விஷால் அந்தப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், ராதாரவி தெரிவித்தனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்சினைகள் குறித்து பாரதிராஜா, ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நேற்று ஆலோசனை நடத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறிய தாவது:

பாரதிராஜா: தமிழ் திரைப்படத் துறையில் தமிழர்கள்தான் அதிக முதலீடு செய்தும், மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலை உள்ளது. எனவே, தமிழ் திரைத்துறையின் அனைத்து பொறுப்புகளும் தமிழர்களின் கைக்கு வரவேண்டும். தென்னிந்திய திரைப் பட நடிகர் சங்கம் என்பது தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையானது தமிழ் திரைப்பட வர்த்தக சபையாகவும் மாற வேண்டும்.

டி.ராஜேந்தர்: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றபோது அளித்த வாக்குறுதிகளை விஷால் இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழ் ராக்கர்ஸை பிடிப்பேன் என்றார். பின்னர், கண்டுபிடித்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால், யார் என்பதை மறைக்கிறார். லைக்கா நிறுவனத்துடன் ஏன் கூட்டணி வைத்துள்ளார் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவின் ஒப்புதலின்றி வேலைநிறுத்தம் செய்ய விஷாலுக்கு யார் அதிகாரம் அளித்தது? ஆந்திரா, கர்நாடகாவில் க்யூப் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தின் ரூ.7 கோடி வைப்பு நிதி எங்கே போனது என்பதற்கும் பதில் அளிக்க மறுக்கிறார். சிறு தயாரிப்பாளர்களின் படங்களை தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்றுத் தருவ தாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விஷால் உடனே விலக வேண்டும்.

ராதாரவி: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றவில்லை. பெரிய நடிகர்களின் படங்களைக்கூட 200 திரையரங்குகளுக்கு மேல் திரையிடக் கூடாது என சட்டம் பேசினார். அவர் தயாரித்து, நடித்த ‘இரும்புத்திரை’ படம் 300 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் பல குளறுபடிகள் உள்ளன. அனைத்து தயாரிப்பாளர்களும் இணைந்து இந்த அமைப்பை மாற்ற வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு தமிழர்தான் தலைவராக வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x