பாரதிதாசன் பல்கலை.யில் படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாரதிதாசன் பல்கலை.யில் படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து, 2023-24-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த 1.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும், அவர்களுக்கு இன்னும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை.

இதனால், பட்டப் படிப்பு தகுதியின் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களால் இன்னும் வேலைக்கு சேர முடியவில்லை.அதேபோல, உயர்கல்வி வாய்ப்பையும் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிகப் பட்டச் சான்றிதழும் வழங்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இன்னும் ஒரு மாதமாகும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.

மாணவர்களின் எதிர்காலத்துடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. கடந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் வரை தற்காலிகப் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை.

அதை சுட்டிக்காட்டி கடந்த 2023 நவம்பர் 11-ல் நான் அறிக்கை வெளியிட்டதற்குப் பிறகுதான் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்காலிக தகுதிச் சான்றுகளை வழங்கியது. அதிலிருந்துகூட பாடம் கற்காமல், நடப்பாண்டிலும் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்காமல் இழுத்தடிப்பதை மன்னிக்க முடியாது.

மாணவர்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், தற்காலிகப் பட்டச் சான்றிதழை வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in