Published : 21 May 2018 09:32 AM
Last Updated : 21 May 2018 09:32 AM

ராகுல் காந்தி ‘ரிங் மாஸ்டர்’ஆக செயல்பட்டார்: காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் பாராட்டு

கர்நாடகாவில் ராகுல்காந்தி ரிங் மாஸ்டராக செயல்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல்வாஷ்னிக், காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளர் டாக்டர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பொதுச் செயலாளர்களான மெய்யப்பன், செல்வம், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, நாங்குனேரி எம்எல்ஏ வசந்தகுமார், முன்னாள் எம்பி ஆரூண், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பூவை ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். கட்சியின் பல்வேறு அமைப்புகளை பலப்படுத்தவேண்டும்” என அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் முகுல்வாஷ்னிக் பேசும்போது, “காங்கிரஸ் கட்சி இந்தியாவில் சுதந்திரமான அரசியலில் ஈடுபடுகிறது. பாஜகவோ, அராஜக அரசியலில் ஈடுபடுகிறது.

கர்நாடகாவில் ராகுல்காந்தி ‘ரிங் மாஸ்டர்’ ஆக செயல்பட்டார். அதன் விளைவாக, அங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து கட்சிப் பணியாற்றி, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, “தமிழக காங்கிரஸில் தற்போது 30 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். அதனை வரும் காமராஜர் பிறந்த நாளுக்குள் 50 லட்சமாக உயர்த்த அனைவரும் உழைக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்த பிறகு காங்கிரஸ் கட்சிதான் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. பன்னீர்செல்வம், பழனிச்சாமி, டிடிவி.தினகரன், நண்பர் ரஜினி, கமல் இவர்களின் வாக்கு வங்கி எவ்வளவு என்பது, இவர்கள் தேர்தலை சந்தித்த பிறகுதான் தெரியவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x