Published : 19 Aug 2024 05:20 AM
Last Updated : 19 Aug 2024 05:20 AM
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் தென் சென்னை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து, தென் சென்னைக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியின் கொடியை தடை செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 13 ஆண்டுகளாக இருக்கும் கட்சியின் கொடியை எப்படி தடை செய்வார்கள்? பொழுதுபோக்குக்காக யாரோ சிலர் இவ்வாறு வதந்திகிளப்பி விடுகின்றனர். அதைப் பொருட்படுத்த தேவையில்லை.
அறம் சார்ந்த நல்லாட்சியை தருவதுதான் நாம் தமிழர் கட்சியின் கனவு. தரமான கல்வி, மருத்துவம், நீர் சேமிப்பு, வேளாண்மை குறித்தெல்லாம் எனக்கு பல கனவுகள் இருக்கின்றன. யாருடன் கூட்டணி சேர்ந்து இவற்றை நான் நிறைவேற்ற முடியும்? எனது கனவை நான் தான் நிறைவேற்ற வேண்டும்.
வேளாண்மையை அரசுப் பணியாக மாற்றுவேன் என்றுகூறினால் எல்லோரும் சிரிக்கின்றனர். ஆனால், பில்கேட்ஸ் 2.75லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்து,அதில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினால், அதை கொண்டாடுகின்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதற்கான பணிகளை செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவை விஜய்தான் எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT