Published : 17 May 2018 08:15 AM
Last Updated : 17 May 2018 08:15 AM

ரேங்க் பட்டியல் முறை ஒழிப்பால் ஆரவாரமின்றி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக் கல்வித் துறைக்கு பாராட்டு

ரேங்க் பட்டியல் முறை ஒழிக்கப்பட்டதால் இந்த ஆண்டும் எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியான முறையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாநில, மாவட்ட அளவில் ரேங்க் பெற்றவர்கள், பாடவாரியாக முதலிடத்தை பிடித்தவர்கள் என பல்வேறு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாநில, மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு அவரவர் பள்ளிகளில் பாராட்டு மழை குவியும். ரேங்க் பெற்ற பள்ளிகளில் சாதனை மாணவர்களிடம் பேட்டி எடுப்பதற்காக தொலைக்காட்சி, நாளிதழ்களின் செய்தியாளர்கள், கேமராமேன்கள், போட்டோகிராபர் கள் குவிந்துவிடுவர். பெற்றோரும் ஆசிரியர்களும் அந்த மாணவர்களுக்கு இனிப்பூட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் காணலாம்.

தங்கள் பள்ளியை விளம்பரப்படுத்தும் வகையில், ரேங்க் பெற்ற மாணவர்களின் படங்களைப் போட்டு பள்ளி நிர்வாகத்தினர் பெரிய பெரிய பேனர்களை வைப்பார்கள். இந்த காட்சிகள் எல்லாம் ஒருசில மதிப்பெண்ணில் ரேங்க் வாய்ப்பை இழந்த, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தது. அதேபோல, எங்கள் பள்ளி மாணவர் முதலிடம், இந்தப் பாடத்தில் எங்கள் பள்ளி முதலிடம் என பள்ளிகளுக்கு இடையேயும் ஆரோக்கியமற்ற போட்டி இருந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுத்தேர்வின்போது ரேங்க் பட்டி யல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யவும், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. அதற்கு மூலகாரணமாக இருந்தவர் பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக இருந்த த.உதயச்சந் திரன். இப்புதிய நடைமுறையின்படியே கடந்த ஆண்டு ரேங்க் பட்டியல் இல்லாமல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தி வந்த ரேங்க் பட்டியல் ஒழிக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரேங்க் பட்டியல் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை பத்திரிகையாளர்களிடம் நேரில் வழங்கும் நடைமுறையும் இந்த ஆண்டு மாற்றப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியானதும் பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே அரசு தேர்வுத் துறை யின் இணையதளத்தில் இருந்து அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி, அனைத்து பத்திரிகையாளர்களும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை பதிவிறக்கம் செய்துகொண்டனர்.

கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ரேங்க் பட்டியல் இல்லாததால் ஆரவாரம், ஆர்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்காக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி ஆகியோருக்கு ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x