Published : 02 May 2018 04:02 PM
Last Updated : 02 May 2018 04:02 PM

கல்லூரி விழாக்களில் அரசியல் பேச அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

 கல்லூரி விழாக்களை அரசியல் பேசும் களமாக அரசியல் கட்சித் தலைவர்கள் மாற்றி வருவது மாணவர்களிடையே குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதால் இனி அரசியல் பேச அனுமதி அளிக்கக் கூடாது என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் புதிதாக அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளனர். இதில் நடிகர் கமல்ஹாசன் பல கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அந்த நேரங்களில் அவர் அரசின் கொள்கை முடிவுகளையும், பொதுமக்களின் பாதிப்புகள் குறித்தும் பேசி வருகிறார்.

இதேபோன்று சமீபத்தில் பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அதிரடியாக பல கருத்துகளையும், தனது அரசியல் பிரவேசம் குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசினார். இதேபோன்று பட்டிமன்றம், மாணவர்களை மையப்படுத்திய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றன.

இதில் கலந்துக்கொண்டு பேசுபவர்கள் அரசியலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது போன்ற நிகழ்ச்சிப் போர்வையில் தொடர்ந்து மாணவர்களிடையே அரசியல் கருத்துகள் கல்லூரி விழா போர்வையில் கொண்டு செல்லப்படுகிறது. இதை கவனத்தில் கொண்ட கல்லூரி கல்வி இயக்ககம் புதிய முடிவை எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கல்லூரியில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது கட்சி அல்லது இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும்.இதனால் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை பாதிக்கப்படுகிறது.

கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கை மற்றும் கருத்துகளைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்.” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x