சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் போராட்டம்: பேரணியாக சென்று மனு

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் போராட்டம்: பேரணியாக சென்று மனு
Updated on
1 min read

கடலூர்: கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி ஒருவரை மாநகராட்சி தன்னார்வலரான சஞ்சோய் ராய் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட அந்த மாணவிக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களிடம் போதையில் வந்து தகராறு செய்பவர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டும் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவ - மாணவியர் மற்றும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் குலோத்துங்க சோழன், புலிகேசி, வானதி, சிவகுமார், வெங்கடேசன், பிரவீன், வலம்புரிச் செல்வன். ராமநாதன் உள்ளிட்ட பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் சிகிச்சையளிக்க் முதுநிலை மருத்துவர்கள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனால் பெரும்பாலான புறநோயாளிகள் வைத்தியம் பார்க்கமுடியாமல் திரும்பிச் சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கையை அடங்கிய மனுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் திருப்பதியிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அனைத்து மருத்துவர்களும் பணிக்குச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in