Published : 17 Aug 2024 06:41 AM
Last Updated : 17 Aug 2024 06:41 AM
சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா விண்கலம் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர்,ஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியதாவது:
எஸ்எஸ்எல்வி ராக்கெட் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இது இனிமேல் வர்த்தக ரீதியான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் தொழில்நுட்பம் பரிமாற்றம் குறித்து பல நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். அதேநேரம், உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் தரப்படும்.
இதற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் புதிதாக அமைக்கப்படும் ஏவுதளம் கட்டுமான பணிகள் முடிவடைந்து 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்.
தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-08செயற்கைக்கோள், புறஊதா கதிர்கள், காமா கதிர்களை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்துக்கு உதவியாக இருக்கும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, டிசம்பரில்ஆளில்லா திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த திட்டத்துக்கான விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்துசேர்ந்துள்ளது. அதன்ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT