நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது

நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை-இலங்கை இடையே கப்பல்போக்குவரத்து சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.

நாகை துறைமுகத்தில் இருந்துஇலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 14-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில நாட்களிலேயே கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க தனியார் கப்பல்நிறுவனம் முடிவுசெய்து, அந்தமானில் இருந்து ‘சிவகங்கை’ என்றகப்பலை அண்மையில் நாகைதுறை முகத்துக்கு கொண்டுவந்தது. மேலும், கடந்த சில நாட்களாக இலங்கைக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல்சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. நாகை ஆட்சியர் ஆகாஷ்,வை.செல்வராஜ் எம்.பி. முன்னிலையில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனியார் கப்பல் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் ஆகியோர் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்தனர்.

இந்தக் கப்பலில் இலங்கை தமிழர்கள் 5 பேர் உட்பட 44 பயணிகள் பயணம் செய்தனர். நேற்று பிற்பகல் 12.05 மணிக்கு நாகையிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் மாலை 4 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடைந்தது. மீண்டும் இன்று (ஆக. 17) காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகையை வந்தடையும்.

வரும் 18-ம் தேதி முதல் தினமும் இரு மார்க்கத்தில் இருந்தும் பயணிகள் கப்பல் இயக்கப்படும். அதன்படி, நாகையில் இருந்துகாலை 8 மணிக்குப் புறப்படும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு நாகையை வந்தடையும். சாதாரண கட்டணம் ரூ.5,000, பிரீமியம் கட்டணம் ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in