Published : 08 Aug 2014 11:03 AM
Last Updated : 08 Aug 2014 11:03 AM

மூவர் விடுதலைக்கு எதிரான மனுவை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்களை தூக்கில் ஏற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு மூவர் விடுதலைக்கு எதிரான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு வழக்குகளைத் தொடுப்பதை தமிழ் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ""ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டுவிட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களும் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்நேரத்தில் அவர்களுக்கு மீண்டும் தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இதயங்களில் ஈட்டியாக பாய்கிறது.

சிறைக்கொட்டடியில் 24 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலுடன் வாடிக்கொண்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்பது மனசாட்சியுள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். தடா சட்டத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் சித்திரவதை செய்தும், மிரட்டியும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தான் அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்ததாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். திரித்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது அனைவரும் அறிந்த உண்மையாகும். அவ்வாறு இருக்கும் போது உச்சநீதிமன்றத்தால் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட மூவரையும் மீண்டும் தூக்கு மேடையில் ஏற்றத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? எனத் தெரியவில்லை.

வழக்கின் தகுதியைத் தாண்டி பார்த்தாலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் நியாயமற்ற வகையில் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறித்தான் அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. இதை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "இது விசாரிக்க தகுதியற்ற மனு" என்று கூறி தள்ளுபடி செய்தது. இத்தகைய சூழலில் தூக்கு தண்டனையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை திருத்தக் கோரும் சிறப்பு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

தீர்ப்பை திருத்தக் கோரும் மனுக்களை தாக்கல் செய்வதற்கு உச்சநீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. ஒரு வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப்பு இயற்கை நீதிக்கு எதிராக இருந்தாலோ அல்லது நீதிபதிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டிருந்தாலோ மட்டும் தான் திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனால், விசாரிக்க தகுதியற்ற மனு என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவுக்கு ஆதரவாக திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு துடிப்பதைப் பார்க்கும் போது, இது யாரையோ திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசின் மனு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது என்பது தான் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வழக்குகளைத் தொடுப்பதை தமிழ் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

எனவே, மூன்று தமிழர்களின் தண்டனைக் குறைப்புக்கு எதிராக வழக்கு தொடருவதை மத்திய அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக் காலத்தைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் விடுதலை செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x