Published : 17 Aug 2024 04:25 AM
Last Updated : 17 Aug 2024 04:25 AM

விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாள் விமரிசையாக கொண்டாட்டம்

விசிக தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முனைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, கவிஞர்கள் அருண்பாரதி, தனிக்கொடி ஜீவா, தஞ்சை இனியன், வழக்கறிஞர் சினேகா ஆகியோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் விசிகதலைவர் திருமாவளவனின் 62-வதுபிறந்த நாள் விழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக, சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார். தொடர்ந்து, தாயாருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக்கொண்டாடிய திருமாவளவனுக்கு,அமைச்சர் சா.சி.சிவசங்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

காமராஜர் அரங்கில் மாலையில்நடைபெற்ற விழா, கானா இசைவாணிக் குழுவினரின் இசைக் கச்சேரியுடன் தொடங்கியது. ‘கோலோச்ச வா கொள்கை சிறுத்தையே' என்ற தலைப்பில் முனைவர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு வரவேற்றார். பல்வேறு தலைப்புகளில் கவிஞர்கள் அருண்பாரதி, தனிக்கொடி ஜீவா, தஞ்சை இனியன், வழக்கறிஞர் சினேகா ஆகியோர் உரையாற்றினர். ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்குக்கு திக தலைவர் கி.வீரமணிதலைமை வகித்தார். விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு முன்னிலை வகித்தனர். திரைப்பட இயக்குநர்கள் ராஜ்கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன், பட்டிமன்றப் பேச்சாளர் நீலவேணி முத்து, இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர்வாழ்த்திப் பேசினர்.

மேலும், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பேராசிரியர் சுந்தரவள்ளி, கவிஞர் நந்தலாலா, பூபாளம் பிரகதீஸ்வரன், ஊடகவியலாளர் இந்திரகுமார் பங்கேற்றனர். பின்னர், திருமாவளவன் குறித்த ‘விடுதலை நாயகன்' ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இறுதியாக, விசிக தலைவர் திருமாவளவன் ஏற்புரையாற்றினார்.

விழாவை, கட்சியின் முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு,தலைமை நிலையச் செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், இளஞ்சேகுவாரா, அ.பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x