Published : 15 Aug 2024 04:20 AM
Last Updated : 15 Aug 2024 04:20 AM
சென்னை: தேசப் பிரிவினை நினைவு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சிறப்பு புகைப்படக் காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
தேசப் பிரிவினை நிகழ்வுகளின் நினைவு தின புகைப்படக் காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பார்வையிட்டார். மேலும், தேசப்பிரிவினை சம்பவங்களை விளக்கும் காணொலியையும் ஆளுநர் வெளியிட்டார்.
மேலும் வரலாற்றுப் புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், தேசப் பிரிவினை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இடப்பெயர்வால் மக்கள் சந்தித்த துயரங்கள், அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வன்முறை மற்றும் சூறையாடலால் பல இடங்கள் இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்கு ஒப்பாக பாதிக்கப்பட்ட காட்சிகள் என பத்திரிகைகள் வெளியிட்டிருந்த செய்திகளும், புகைப்படங்களும் இதில் இடம்பெற்றன.
ரயில்களிலும், கப்பல்களிலும் ஏறுவதற்காக போராடிய மக்கள் வெள்ளத்தின் புகைப்படங்கள், ரயில்களில் இடம் கிடைக்காமல் ரயில் பாதைகளில் கால்நடையாக மக்கள், குழந்தைகளை தோள்களில் சுமந்து செல்லும் பெற்றோர், வயதான பெற்றோரை தொட்டில் கட்டி சுமந்து சென்ற பிள்ளைகளின் புகைப்படங்கள் என பிரிவினைத் துயரங்களை காட்சிப்படுத்தும் பல வகையான புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இவற்றை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் கிர்லோஷ் குமார், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை, இயக்குநர் லீலா மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் தேசப் பிரிவினை சம்பவங்களின் நினைவு தினத்தையொட்டி புகைப்பட காட்சி நடந்தது. இதை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தொடங்கி வைத்தார். ரயில்வே ஊழியர்கள், பயணிகள் என பலரும் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT