Published : 14 Aug 2024 07:39 PM
Last Updated : 14 Aug 2024 07:39 PM

இண்டியா கூட்டணி பெண் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? - தமிழக பாஜக சரமாரி கேள்வி

கோப்புப் படம்

சென்னை: “கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் இண்டியா கூட்டணியின் பெண் தலைவர்களான கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மவுனம் காப்பது ஏன்?” என்று தமிழக பாஜக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தலைமறைவான இண்டியா கூட்டணியின் பெண்ணியப் போராளிகளான கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு, உங்கள் இண்டியா கூட்டணியின் ஒரு பெண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத்தின் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?

அப்பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மேற்கு வங்கமே கொழுந்துவிட்டெறிய, திராவிடத்தின் பெண்ணியப் போராளிகளான கனிமொழி, ஜோதிமணி, மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய நீங்கள் இன்னும் அமைதி காப்பது ஏன்? அதுதான் உங்கள் இண்டியா கூட்டணியின் ஒப்பந்தமா? இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடல் முழுக்க காயங்களுடன், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்ட செய்தி, இன்னும் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?. இது தற்கொலை என்று கூறி, அவசரமாக இவ்வழக்கை முடிக்க முயற்சித்த கொல்கத்தா காவல் துறைக்கு எதிராக, உங்கள் எதிர்ப்பை எப்போதுதான் தெரிவிப்பீர்கள்?

“செமினார் அரங்குக்கு இரவில் தனியாக அவர் எதற்கு சென்றார்?” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பழி சொல்லெறியும், மேற்கு வங்க அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு எதிராக, பெண்ணியப் போரளிகளான நீங்கள் சிறு கண்டனங்கள் கூட தெரிவிக்காதது ஏன்? “பெண்களுக்கான சமூக நீதி வேண்டும்” என்று நீங்களெல்லாம் நரம்பு புடைக்க பேசுவது வெறும் நாடாளுமன்றத்தில் மட்டும்தானா? அல்லது உங்கள் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலம் என்பதால், உங்கள் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டீர்களா?

குற்றம் நடந்த இடத்தில் திடீர் கட்டுமானப் பணிகளைத் துவங்குதல், குற்றம் நடந்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரை வேறு கல்லூரிக்கு அவசரமாக இடமாற்றம் செய்தல் முதலிய தடயங்களை அழித்து, இக்கொலையை மூடி மறைக்க நினைக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியின் முதல்வருக்கு எதிராக நீங்கள் எப்போதுதான் குரல் கொடுப்பீர்கள்? ஒருவேளை இக்கொலையில் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி உங்கள் மனதை உறுத்தவில்லையா?

இன்று உங்கள் கூட்டணிக் கட்சியின் மானத்தைக் காப்பாற்ற நீங்கள் காக்கும் இந்த கனத்த மவுனமானது, நாளை பல பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x